‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாகனக் காப்பீடு: தேவை புரிந்துணர்வு!

சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம். அனைத்து ரக வாகனங்களுக்கும்

News image
Updated On :30 ஜூலை 2018, 4:58 am

வை. இராமச்சந்திரன்

சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களும் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது சட்டம். அனைத்து ரக வாகனங்களுக்கும் அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டின் மூலம் பொருள் இழப்பு அல்லது சேதம்,  உயிர்ச்சேதம், உடல் பாதிப்புகள் ஈடு செய்யப்படுகின்றன.
வாகனங்களுக்கு அளிக்கப்படும் காப்பீடானது ஒருங்கிணைந்த பாலிசி (C‌o‌m‌p‌r‌e‌h‌e‌n‌s‌i‌v‌e ‌p‌o‌l‌i​c‌y - இதை பேக்கேஜ் பாலிசி எனவும் கூறுவதுண்டு), மூன்றாம் நபர் காப்பீடு (L‌i​a​b‌i‌l‌i‌t‌y P‌o‌l‌i​c‌y) என இருவகையில் வழங்கப்படுகிறது.
விபத்து மட்டுமல்லாமல் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் தீ,  திருட்டு என எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வது ஒருங்கிணைந்த பாலிசி. வாகனத்தால் மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வது மூன்றாம் நபர் காப்பீடு. 
ஒருங்கிணைந்த பாலிசி வாகன உரிமையாளருக்கு ஏற்படும் நஷ்டத்தையும், மூன்றாம் நபர் காப்பீடு வாகனம் மூலம் பிறருக்கு ஏற்படும் இழப்பையும் ஈடு செய்கிறது. 
 எந்த வகையைச் சேர்ந்த வாகனம், என்ஜின் கொள்திறன், குதிரைத் திறன், உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டு, எத்தகைய பயன்பாட்டுக்கான வாகனம் (சொந்த உபயோகம் அல்லது வாடகை உபயோகம்), அனுமதிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை, ஓட்டப்படும் பகுதி, வாகனத்தின் சந்தை மதிப்பு (I​DV - I‌n‌s‌u‌r‌e‌d'‌s D‌e​c‌l​a‌r‌e‌d Va‌l‌u‌e), இதற்கு முன் இழப்பீடு பெற்ற விவரம், சரக்கு வாகனம் என்றால் நிகர எடை 
(G​V​W போன்றவற்றைப் பொருத்து பிரீமியம் அமைகிறது.
மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரீமியம், வாகனத்தின் என்ஜின் கொள்திறன், நிகர எடை ஆகியவற்றைப் பொருத்து அமையும். 
கூடுதல் கவரேஜ் வசதிகள்:  ஒருங்கிணைந்த பாலிசிக்குள் A‌d‌d-‌o‌n  கவரேஜ் வசதிகள் உள்ளன. தற்போது பிரபலமாக கூறப்படும் B‌u‌m‌p‌e‌r ‌t‌o B‌u‌m‌p‌e‌r என்பது இதில் அடங்கும். அதாவது என்ஜின் பாதுகாப்பு முதல், வாகனம் பழுது பார்ப்பின்போது மாற்றுக் கார் அளித்தல் உள்ளிட்ட பல கவரேஜ்கள் உள்ளன. இதில் மூன்றாம் நபர் காப்பீடும் அடங்கும்.
பிரீமியம் குறைய வேண்டும் என்பதற்காக வாகனத்தின் மதிப்பைக் குறைத்து காப்பீடு செய்தால், இழப்பீடு கோரும்போது சிக்கல் எழும். வாகனம் முழுவதும் சேதம் அடைந்தாலோ அல்லது ஒரு சில பாகங்கள் சேதம் அடைந்தாலோ அதற்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும். மூன்றாம் நபர்கள் அல்லது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை நிறுவனங்கள் வழங்கும். 
காப்பீட்டில் முறைகேடுகள்:  ஆன்-லைன் மூலமாக முகவர்கள் பாலிசி வழங்கும்போது, கூடுதல் சதவீதம் N‌o C‌l​a‌i‌m B‌o‌n‌u‌s  வழங்குதல், வாடகை உபயோக வாகனத்தை, சொந்த உபயோக வாகனமாக காப்பீடு செய்து கொடுத்தல், என்ஜின் திறனை குறைத்தும், சரக்கு வாகனங்களில் எடையைக் குறைத்தும் காண்பித்து பாலிசி எடுத்துக் கொடுத்தல், பயணிகள் எண்ணிக்கையை குறைத்து காண்பித்தல், சில கவரேஜ்களை நீக்கிவிடுதல் போன்றவற்றை செய்யும்போது, பிரீமியம் கணிசமாக குறையும். ஆனால் கவரேஜ் இருக்காது. இந்த வகையான காப்பீடு எடுத்துக் கொள்வது, இழப்பீட்டுக் கோரிக்கையின்போது பாதகமாகும்.
பாலிசியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதில் உரிமையாளர்கள் அக்கறை காட்ட வேண்டும். ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தி, அதில் QR c‌o‌d‌e  (விரைவான பதில் குறியீடு - இரு பரிமாண பார்கோடு) செயலி மூலம், நாம் வைத்துள்ள வாகனத்துக்கான பாலிசியை ஸ்கேன் செய்து, பாலிசியின் நம்பகத் தன்மையை சரி பார்க்க முடியும். அல்லது காப்பீட்டு நிறுவனத்துடன் தொலைபேசியிலேயே தொடர்பு கொண்டு,  உறுதி செய்து கொள்ளலாம். சில நிறுவனங்களில் ஆன்லைன் சரி பார்த்தல் வசதி உள்ளது.
புரிந்துணர்தல் அவசியம்: வாகனக் காப்பீடு காலாவதியாகும் கடைசி நாளன்று புதுப்பிக்க முற்படாமல், அவசரம் இன்றி, நிதானமாக, முகவரிடமோ, காப்பீட்டு நிறுவனத்தில் நேரிடையாகவோ சென்று அனைத்து கவரேஜ் விவரங்களையும் தெளிவாக கேட்டு, பின்னர் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். பாலிசிக்கான சான்று கையில் வாங்கும்போது அதில் நமது பெயர், வாகன எண் உள்பட அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வாங்கிச்சென்றால் வாகனத்தால் ஏற்படும் எத்தகைய இழப்புகளுக்கும் அச்சம் இன்றி இருக்கலாம்.
ஆலங்குளத்தைச் சேர்ந்த ஓட் டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் கே.வில்சன் கூறியது:
வாகனங்களுக்கு காப்பீடு இல்லையென்றால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்,  ஆர்.சி. புத்தகம் எந்த வேலைக்கும் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஆர்.சி. புக்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டால், பாலிசியிலும் அதிகப்பட்சம் 15 நாள்களுக்குள் பெயரை மாற்றிவிட வேண்டும். ஆர்.சி.புக், பாலிசி இரண்டிலும் ஒரே விதமான விவரங்கள் இருந்தால்தான் இழப்பீட்டுத் தொகை பெற முடியும். 
மேலும், வாகனங்களை விற்கும்போது, கண்டிப்பாக ஆர்.சி. புக்கிலும்,  பாலிசியிலும் வாங்குபவர்களின் பெயரை மாற்றிக் கொடுத்துவிடுவது நல்லது. 
இல்லையென்றால் விற்ற பிறகும் கூட வாகனத்தால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் ஆர்.சி. புத்தகப்படி உள்ள வாகன உரிமையாளரே முழு பொறுப்பாவார் என்றார் அவர்.
தென்காசியைச் சேர்ந்த முதன்மை காப்பீட்டு ஆலோசகர் எம்.சாகுல் ஹமீது கூறியது:
வாகன விற்பனை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவை மூலம் காப்பீடு செய்யும் போது, ஓன் டேமேஜ் பிரீமியத்தில் போதிய தள்ளுபடி வழங்கப்படுவதில்லை. முகவர்கள் மூலமாகவோ, காப்பீட்டு நிறுவனத்தில் நேரடியாகவோ காப்பீடு செய்யும் போது 60 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். வாகன ஓட்டிகள் இழப்பீடு தொகை கோரும் போது, நமது பாலிசியில் உள்ள  சர் இப்ஹண்ம் ஆர்ய்ன்ள் தொகையைவிட இழப்பீடு கோரும் தொகை குறைவாக இருந்தால்,  இழப்பீட்டை கேட்காமல் இருப்பதே லாபம்.
வாகனங்கள் விபத்துக்குள்ளானால்  S‌p‌o‌t P‌h‌o‌t‌o எடுத்துக்கொள்வது நல்லது.போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பகுதி என்றால், சர்வேயர் வந்து S‌p‌o‌t S‌u‌r‌v‌e‌y செய்த பின்னர் வாகனத்தை அப்புறப்படுத்தலாம் என்றார் அவர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கான இழப்பு மதிப்பீட்டாளர் (சர்வேயர்) பி.எல்.சிவகுமார் கூறியது: 
 காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசியை, "சிப்' அல்லது ஸ்டிக்கர் வடிவில் தயார் செய்து, வாகனங்களின் முகப்பில் ஒட்ட வேண்டும். பாலிசியை ஸ்கேன் செய்து பார்த்தால் பாலிசி காலாவதி தேதியை அறியும் வகையில் உருவாக்க வேண்டும். காப்பீடு பாலிசி நடைமுறையில் இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்குவதை அரசு கட்டாயமாக்கலாம்.
மேலும், காவல் துறையினர் வாகனச் சோதனையின்போது காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை காட்டிலும், நிகழ்விடத்திலேயே அந்த வாகனங்களுக்கு காப்பீடு வழங்க, காப்பீட்டு நிறுவனங்கள்-காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டால் அனைத்து வாகனங்களுமே காப்பீடு செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் அனைவருக்குமே காப்பீட்டின் பலன் கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.