மத்திய அமைச்சருடன் மாயாபுரி வணிகர்கள் சந்திப்பு

மாயாபுரி சீலிங் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்தனர்.
Updated on
1 min read


மாயாபுரி சீலிங் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரை செவ்வாய்கிழமை நேரில் சந்தித்தனர்.
தில்லி பாஜக அலுவலகத்தில் மனோஜ் திவாரியை சந்தித்த அவர்கள்,  சீலிங் நடவடிக்கையில் வணிகர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, வணிகர்கள் மத்தியில் பேசிய மனோஜ் திவாரி, மாயாபுரியில் தில்லி அரசே சீலிங் நடவடிக்கையை மேற்கொண்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தில்லி அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். பாஜகவுக்கு பெரும் பலமாக இருக்கும் வணிகர்களை பாஜகவுக்கு எதிராகத் திருப்பும் நோக்கில்  தில்லி அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது' என்றார். 
இதேபோன்று,  மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை அவரது அலுவலகத்தில் வணிகர்கள் சந்தித்தனர். அப்போது, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பர்வேஷ் வர்மாவும் உடனிருந்தார். 
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ஹர்தீப் சிங் புரி  தில்லி அரசின் பொறுப்பற்ற தன்மையால் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வணிகர்களுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது தில்லி அரசின் கடமையாகும். மாறாக, இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது தவறாகும். இந்த விவகாரத்தில் தில்லி வளர்ச்சி ஆணையம் வணிகர்களுக்கு நிலம் ஒதுக்கவில்லை என கேஜரிவால் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். நிலம் ஒதுக்குமாறு தில்லி வளர்ச்சி ஆணையத்தை கேஜரிவால் கோரவில்லை. தாங்கள் இழைத்த தவறுகளுக்காக மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறது தில்லி அரசு' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com