சென்னையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

சென்னையில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால்
Updated on
1 min read

சென்னையில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மக்களவையில் அதிமுக  வலியுறுத்தியது.
இது தொடர்பாக மக்களவையில் விதி எண்  377-இன் கீழ், வடசென்னை அதிமுக உறுப்பினர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை: வடகிழக்கு பருவமழையின் போது, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது அவசியம். இதன் மூலம்,  மழைக் காலங்களில் ஏற்படும் கூடுதல் நீர் வெளியேற்றப்படும். பிரதமர் நரேந்திர மோடி 2017, நவம்பரில் தமிழகத்திற்கு வருகை தந்த போது, சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பதற்காக ரூ.1,500 கோடியை சிறப்பு நிதியாக ஒதுக்க சம்மதம் தெரிவித்திருந்தார். எனவே, இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஓய்வூதியத் திட்டத்திற்கு வரவேற்பு: மக்களவையில் திங்கள்கிழமை பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.அசோக்குமார் முன்வைத்த கோரிக்கை: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி ஆதரவு அளிக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பயனாளி விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் வரவு வைக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். கால்நடை, மீன்வளம் செயல்பாடுகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு 2 சதவீதம் வட்டி மானியம் அளிக்கும் முன்மொழிவை வரவேற்கிறேன். மேலும்,  கடனை உரிய காலத்தில் செலுத்தினால், கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்பட  உள்ளது. அதேபோன்று,  அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் வரவேற்புக்குரியது.
நிலம் கையப்படுத்தும் விவகாரம்: மக்களவையில் விதி எண் 377-இன் கீழ், சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எம். சந்திரகாசி முன்வைத்த கோரிக்கை:  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) தனது 3-ஆவது சுரங்க விரிவாக்கத்திற்காக  விவசாய நிலம் 12,125 ஏக்கரை கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே,  இந்த முடிவை என்எல்சி நிறுவனம் கைவிட  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com