ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் தமிழக அரசு, வேதாந்தா குழுமம் ஆகியவை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வரவுள்ளன.
வேதாந்தா குழும நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மே 22-இல் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேதிய பசுமைத் தீர்ப்பாயம், "ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே 28-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், அன்றைய தினத்திலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தது.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது; ஜனவரி 21-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோல, ஆலையைத் திறக்க அனுமதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த புதன்கிழமை (ஜனவரி 2) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் இணைக்கப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 8) 5-ஆவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.