தில்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள்!

பயிர்க்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லி நோக்கி பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான
தில்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள்!
Updated on
1 min read


பயிர்க்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லி நோக்கி பேரணியாக சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை, தில்லிக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரும்பு நிலுவைத் தொகை, பயிர்க்கடன் தள்ளுபடி, நீர்ப்பாசனத்துக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலம், சஹாரன்பூரிலிருந்து தில்லியிலுள்ள கிஸான் காட் நோக்கி கடந்த 11-ஆம் தேதி விவசாயிகள் நடைபேரணியை தொடங்கினர்.
பாரதிய கிஸான் சங்கதன் அமைப்பு சார்பில் நடைபெற்ற இப்பேரணி, கடந்த வெள்ளிக்கிழமை நொய்டாவை வந்தடைந்தது.
இதனிடையே, அரசுக்கும், விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, தங்களது நடைப்பேரணியை விவசாயிகள் தொடர்ந்தனர்.
கிழக்கு தில்லியின் காஜிப்பூர் எல்லை அருகே சனிக்கிழமை வந்தடைந்த பேரணியை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24-இல் அமர்ந்து, விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
விவசாயிகள் தில்லிக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை 24, தேசிய நெடுஞ்சாலை 9 ஆகியவற்றில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல்துறையினர் மட்டுமன்றி, துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கலவரத் தடுப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 
இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டதாக, தில்லி காவல்துறை (கிழக்கு சரகம்) இணை ஆணையர் அலோக் குமார் தெரிவித்தார்.
போராட்டம் வாபஸ்
தில்லி-உத்தரப் பிரதேச எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விவசாயிகளின் பிரதிநிதிகள் தில்லியில் உள்ள வேளாண் துறை அமைச்சக அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், வேளாண் அமைச்சக இணைச் செயலர் விவேக் அகர்வால் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. இதுதொடர்பாக, பாரதிய கிஸான் சங்கதன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் லலித் ராணா கூறுகையில்,  விவசாயிகளின் 15 கோரிக்கைகளில், 5 கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படுவதாக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com