கூட்டணிக் குழப்பங்களுக்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தீவிரம்
By DIN | Published On : 01st April 2019 07:38 AM | Last Updated : 01st April 2019 07:38 AM | அ+அ அ- |

ஆம் ஆத்மியுடன் கூட்டணி ஏற்படுமா, ஏற்படாதா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தில்லியில் உள்ள ஏழு தொகுதிக்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் யாரைக் களத்தில் இறக்குவது என்பது தொடர்பாக அக்கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித், தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவைத் தோல்வியடையச் செய்வதற்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான கேஜரிவால் அழைப்பு விடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஷீலா தீட்சித் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார் என அக்கட்சியின் தில்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ தெரிவித்திருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்து பிரசாரத்தை தீவிரப்படுத்திவிட்டது.
இந்நிலையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி முடிவாகாமல் இழுபறி நீடித்து வருவதற்கு தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னையே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டால் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸுக்கு 2 இடங்கள்தான் தர முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததால் கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலவுவதாக மற்றொரு காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலையில்தான், இரண்டு தினங்களுக்கு முன்பு கேஜரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தில்லியில் எங்களுக்கு கூட்டணி அமைக்கும் தேவை எழ வில்லை என்றும், ஹரியாணாவில்தான் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்து புதன்கிழமை அறிவிப்பார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அதுபற்றி எந்தத் தகவலும் இல்லை. தில்லியில் ஆம் ஆத்மி, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் இன்னும் அதுபற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகுதான் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்தவதில் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வேட்பாளர் பரிசீலனை பட்டியலைத் தயாரிப்பது தொடர்பாக ஷீலா தீட்சித் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தில்லி தலைவர்கள, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொத்தம் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து மொத்தம் 80 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் செயல் தலைவர்கள், நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2-3 பேர்களைத் தேர்ந்தெடுத்து இறுதி வேட்பாளர் பரிசீலனைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடச்தி தலைமைக்கு விரைவில் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கட்சித் தலைமை வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.