கட்டுமான தொழிலாளர்களுக்கான நல நிதி ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? மத்திய, தில்லி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
By DIN | Published On : 12th April 2019 12:18 AM | Last Updated : 12th April 2019 12:18 AM | அ+அ அ- |

தில்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்படும் காலகட்டத்தில், வேலையின்றி இருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க, அவர்களுக்கென வசூலிக்கப்பட்ட நல நிதி ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? என்று மத்திய மற்றும் தில்லி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தொழிலாளர் நல ஆர்வலர் செளரவ் பட்நாகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே. பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியது.
முன்னதாக செளரவ் பட்நாகர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
தில்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்படும்போதோ, அல்லது ஒத்திவைக்கப்படும்போதோ அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தினக் கூலி அடிப்படையில் குறைந்தபட்ச நிதி ஆதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
அத்தகைய நலத் திட்டமோ, கொள்கையோ அமல்படுத்தப்பட்டு முன்னோட்டமாக சோதிக்கப்படும் வரையில் தில்லியில் எந்தவொரு கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்படக் கூடாது. கட்டடக் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியமானது, தொழிலாளர்கள் நல நிதியாக இதுவரையில் ரூ.,2000 கோடி வசூலித்துள்ளது. ஆனால், தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டில் ரூ. 73 கோடிக்கும் குறைவாகவே செலவழிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே. பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:
கட்டுமான நிறுவனங்கள், நுகர்வோர்கள் ஆகியோரிடம் இருந்து தொழிலாளர்களுக்கான நல நிதியாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வசூலிக்கப்படுகின்றன. எனினும், அதில் சிறிதளவு கூட தொழிலாளர்களின் நலனுக்கென அரசுகள் செலவழிப்பதில்லை.
இதற்கு ஏன் மத்திய மற்றும் தில்லி அரசுகள் பொறுப்புடையவை ஆக்கப்படக் கூடாது? அவ்வாறு வசூலிக்கப்படும் நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
இதற்கு தில்லி மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். அத்துடன், தொழிலாளர்கள் நல நிதி எதனால் பயன்படுத்தப்படுவதில்லை என்பது தொடர்பாக தில்லி கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி-என்சிஆர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் ஆகியவையும் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
பின்னர், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.