செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா
By DIN | Published On : 17th April 2019 01:11 AM | Last Updated : 17th April 2019 01:11 AM | அ+அ அ- |

தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செயல்படும் செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பேரவையின் செயலர் ஏ.மாரி தலைமை வகித்தார். விழாவையொட்டி, குழந்தைகள், பெண்களுக்கான கோலப் போட்டி, ஆண்களுக்கான உரியடி போட்டி ஆகியவை நடைபெற்றன. பின்னர், பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி டி.பி.ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாலை நேர கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியை ஏ.கே.முத்துலட்சுமி தொடங்கிவைத்தார். நடனம், பாடல், மாறுவேடம், கோலாட்டம், கும்மி, கரகம் ஆகிய நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள், பெண்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, திருப்பூர் ராஜேஷ், கோவை செந்தில் ஆகியோர் பங்கேற்ற பல்சுவை கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் முதன்மை விருந்தினராக தில்லி தலைமைச் செயலக சிறப்புக் கண்காணிப்புச் செயலர் சி.உதயக்குமார், சிறப்பு விருந்தினராக தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.முகுந்தன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச்செயலர் என்.கண்ணன், ஸ்ரீகணேஷ் சேவா சமாஜ தலைவர் எஸ்.ஜெயராமன், எஸ்.கே.வி.நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.வி.ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் ஆர்.முகுந்தனுக்கு தமிழ் பணிச் செம்மல்' விருது வழங்கப்பட்டது. இணைச் செயலர் எஸ்.கிருஷ்ணராஜ் வரவேற்றார். பொருளாளர் ஏ.எம். ஆறுமுகம் நன்றி கூறினார்.
துணைப் பொருளாளர் எஸ்.சரவணன், இணைச் செயலர் கே.கிரண் பாலாஜி, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அன்பு பாண்டியன் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செந்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் ம.ரமேஷ், மாரி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...