தமிழகத்தில் பணப் பட்டுவாடா விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையத்தின் கருத்தை கோரியுள்ள உச்சநீதிமன்றம்


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தேர்தல் ஆணையத்தின் கருத்தை கோரியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் எனத் தெரிவிக்கும் வகையில், தொலைக்காட்சிகள், நாளேடுகள், வானொலி உள்ளிட்டவற்றில் போதுமான விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்க பறக்கும் படையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் பறக்கும் படையை அதிகாரிகளின் தொலைபேசி, கைப்பேசி எண்களை விளம்பரம் செய்ய வேண்டும். சாலையோரம், பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமான அல்லது நிரந்தர பிளக்ஸ் போர்டுகளை வைக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வாக்குக்கு பணம் அளிப்பது தொடர்பான புகாரில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ தேர்தலுக்காக அரசு செலவிட்ட தொகையை வேட்பாளர் அல்லது கட்சித் தலைவரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தேன். ஆனால், மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் மனுவை கடந்த மார்ச் 26-இல் தள்ளுபடி செய்துவிட்டது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த  மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சி.ஆர். ஜெய சுகின் ஆஜராகி,  தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு நடைபெறும் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் போது விநியோகிப்பதற்காக  ரூ. 10 ஆயிரம் கோடி வந்திருப்பதாகவும், ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் பணப் பட்டுவாடா அதிகரித்து வருவதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது' என்றார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து தேவையான வழிகாட்டுதல் பெறும் வகையில், மனுவின் நகலை தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் அமித் சர்மாவுக்கு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: இதற்கிடையே, நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல், சில மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை உரிய பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எம். ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சில நிர்வாக அதிகாரிகள் மட்டுமே செல்ல முடியும் என்பதால், அதில் திருத்தம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தம் செய்வதைத் தடுக்கும் வகையில், அவற்றுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com