மெட்ரோ ரயில் பெட்டியின் கதவில் சேலை சிக்கி பெண் பயணி படுகாயம்
By DIN | Published On : 17th April 2019 01:10 AM | Last Updated : 17th April 2019 01:10 AM | அ+அ அ- |

தில்லியில் செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் பெட்டியின் கதவின் இடுக்கில் சேலை சிக்கியதால் 40 வயது பெண் பயணி படுகாயமடைந்தார். மேலும், ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படத் தொடங்கிய போது இச்சம்பவம் ஏற்பட்டதால் பெண் பயணி நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்தார்.
தில்லி இந்தர் லோக் அருகே உள்ள சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தனது மகளுடன் மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து கீதாவின் கணவர் ஜகதீஷ் பிரசாத் கூறியதாவது: எனது மனைவியும், மகளும் நவாடாவில் இருந்து ரயிலில் பயணம் செய்தனர். மோதி நகர் ரயில் நிலையத்தில் இறங்கினர். அப்போது, கீதாவின் சேலை கதவின் இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதன் விளைவாக, நடைமேடையில் அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து எனது மகள் எனக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகளில் ஒருவர் அவசரகால பொத்தானை அழுத்தி ரயிலை நிறுத்துமாறு அதன் ஓட்டுநரை உஷார்படுத்தினார் என்றார் அவர்.
இச்சம்பவம் குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், இச்சம்பவம் மோதி நகர் ரயில் நிலையத்தில் காலை 9.19 மணிக்கு நிகழ்ந்தது. வைஷாலி செல்லும் மெட்ரோ ரயிலில் இருந்து பெண் பயணி இறங்கிய போது அவரது சேலை ரயில் பெட்டி கதவில் சிக்கியது.
இதையடுத்து, ரயில் ஓட்டுநர் உடனடியாக அவசரகால பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினார். ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று பயணியை மீட்டார். பின்னர், முதலுதவிச் சிகிச்சை அளித்த பிறகு அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உச்சபட்ச நெரிசல் நேரங்களில் ரயிலில் ஏறும் போதும், இறங்கும் போது பயணிகள் கூடுதல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்' என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...