இடுப்பு எலும்பு முறிவிலிருந்து முதியோரை பாதுகாக்க எய்ம்ஸில் ஆய்வகம்
By DIN | Published On : 26th April 2019 12:04 AM | Last Updated : 26th April 2019 12:04 AM | அ+அ அ- |

இடுப்பு எலும்பு முறிவிலிருந்து முதியோரைப் பாதுகாக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) உள்ள முடநீக்கியல் துறையில் இந்த ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடுப்பு முறிவு ஏற்படாத வகையில் முதியோரைப் பாதுகாக்க அவர்களுக்கான பயிற்சித் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாத்தி' (இடுப்பை காப்போம் முன்முயற்சி) எனும் இத்திட்டத்தில் முதியோருக்கு தேவையான ஆலோனையை அளிக்கும் வகையில் எட்டு வாரங்கள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆய்வகத்தை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா திறந்துவைத்தார்.
இந்த ஆய்வகத்தின் மூலம், கீழே விழாமல் எவ்வாறு இருப்பது என்பது குறித்து முதியோருக்கு பயிற்சி அளிப்பதுடன், முதியோர்கள் கீழே விழுவதற்கான இடர்பாடுகள் குறித்தும் ஆராயப்படும்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் முடநீக்கியல் துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறுகையில்,மனித உடலில் எலும்புகள் திடீரென செயலிழந்து விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
வயதான காலத்தின் போது முதுமைக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வது, பார்வைக் குறைபாடு, நரம்பு தொடர்பான நோய்கள் ஆகியவற்றின் காரணமாக நடந்துகொண்டிருக்கும் போது அவர்கள் திடீரென விழுந்து விடுவர்.
ஓர் ஆண்டில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தங்களது உடல் எலும்புகளில் செயல்பாடுகளை இழக்கும் நிலை உள்ளது. இவர்களில் 20 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, 10 சதவீத முதியோர் எலும்பு முறிவுக்குஉள்ளாகின்றனர். அரிதாக மூளை காயமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் ஒரு டன் இயந்திரங்கள், கருவிகள் நிறுவப்பட்டுள்ளன என்றார் அவர்.