நீட் தேர்வர்கள் சமயச் சின்னங்கள் அணிய விதிமுறைகள்: சீக்கிய குருத்வாரா குழு எதிர்ப்பு
By DIN | Published On : 26th April 2019 12:03 AM | Last Updated : 26th April 2019 12:03 AM | அ+அ அ- |

தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பவர்களில் சமயச் சின்னங்களை அணிபவர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்ற விதிமுறைக்கு தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎஸ்ஜிஎம்சி தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்ஸா வியாழக்கிழமை கூறியதாவது:
நீட்' தேர்வு எழுதுவோர் சமயச் சின்னங்கள் அணிபவராக இருந்தால் பிற தேர்வர்களை விட ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) விதிகளை உருவாக்கியுள்ளது. இது அரசியலமைப்பின் ஷரத்துகளின் மீறல் மட்டுமல்ல. ஆனால், முற்றிலும் தேவையற்ற, நியாயமற்ற மற்றும் இயல்பிலேயே பாகுபாடு கொண்ட ஒரு செயலாகும். நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. மேலும், மக்களின் மதச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. நிறம், மொழி, இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டையும் தடுக்கிறது.
அரசியலமைப்பின் ஷரத்துகளை உறுதிப்படுத்தும் கடைமையை அரசு அமைப்பே செயல்படுத்தத் தவறினால் அரசியலமைப்பின் ஷரத்துகளுக்கு தனியார் அமைப்புகள் மதிப்புக் கொடுக்கும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
சீக்கியர்களால் ஐந்து கக்கார்கள் அணியப்படுகிறது. இது சீக்கிய குரு சஹிபானின் வழக்கத்தின்படி கட்டாயமாகும். குரு சாஹிபானின் உத்தரவுகளின்படி, இதை அனைத்து சீக்கியர்களும் அணிகின்றனர். உலகின் எந்தவொரு பரீட்சைக்காகவும் சீக்கியர்கள் இந்த மதச் சின்னங்களை ஒதுக்குவது சாத்தியமாகாது.
எனவே, தேர்வு எழுதுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று உருவாக்கப்பட்டுள்ள விதிமுறையை ஏற்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரி, மன்ஜீந்தர் சிங் சிர்ஸா மற்றும் தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் பொதுச் செயலர் ஹர்மீத் சிங் ஹல்கா ஆகியோர் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். நாடு முழுமைக்குமான எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பு இடங்களுக்கான நீட்' தேர்வு அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.