மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: மகளிர் விடுதி பாதுகாவலர் கைது
By DIN | Published On : 26th April 2019 12:05 AM | Last Updated : 26th April 2019 12:05 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகர் வலயம், கிரேட்டர் நொய்டா பகுதியில் செயல்படும் மகளிர் விடுதியில், மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அந்த விடுதியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நாலெட்ஜ் பார்க் காவல் நிலைய அதிகாரி அரவிந்த் பதக் வியாழக்கிழமை கூறியதாவது:
கிரேட்டர் நொய்டா பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியில் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர் வெளியில் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு தாமதமாக விடுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர், அவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், விடுதி பதிவேட்டில் தாம் கையெழுத்திட்டபோது பாதுகாவலர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக 2 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
பிறகு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பாதுகாவலர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் என்று காவல் அதிகாரி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை மாலை, அந்த மகளிர் விடுதி முன்பாக அதில் தங்கியிருந்த மகளிர் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.