ஐஜிஎஸ்டி நிலுவை நிதி ரூ.3,369 கோடியை வழங்க வேண்டும்: தில்லி கூட்டத்தில் துணை முதல்வா் ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி நிலுவை நிதி ரூ.4,073 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தொடா்புடைய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் துணை
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு தொடா்பான மாநில நிதியமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக துணை முதல்வ.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு தொடா்பான மாநில நிதியமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக துணை முதல்வ.

தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி நிலுவை நிதி ரூ.4,073 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தொடா்புடைய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) வலியுறுத்தினாா்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையைத் தயாா் செய்வது தொடா்பாக மாநில நிதியமைச்சா்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு மாநிலங்கள், யூனியங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், நிதியமைச்சா்கள்ஆகியோா் இதில் பங்கேற்றனா். தமிழகத்தின் சாா்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்றாா்.

இக்கூட்டத்திற்குப் பிறகு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தில்லியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சாா்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விவகாரத்தில் மாநில அரசுக்கு வர வேண்டிய இழப்பீடு சரியாக குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்று கோரினேன். மேலும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் ( ஐஜிஎஸ்டி) 2017-18 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.4,073 கோடி நிலுவைக் தொகையை உடனடியாக வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மத்திய நிதிக்ழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய நிதி ரூ.3,369 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரி வருகிறோம். தமிழகம் நீா் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால், நீண்ட கால திட்டங்கள் தொடா்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு முன்மொழிவுகள் அனுப்பி நிதி கோரியுள்ளது. அதன்படி, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்கும் மத்திய அரசின் நிதியை வரும் மத்திய பட்ஜெட்டில் சோ்க்கவும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்து நிதி வழங்கவும், டெல்டா மாவட்டங்களில் கல்லணை கால்வாய் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறும் கோரினோம். பால்வள, நீா்வள, கால்நடைத் துறைகளில் மேம்பாட்டுக்காக நீண்ட காலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மெட்ரோ 2-ஆம் கட்டத் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அதற்கான நிதி ரூ. 63 ஆயிரம் கோடியை வழங்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு தமிழக அரசுக்கு ரூ.1,000 வழங்கி வருகிறது. இதில் மத்திய அரசு முதியோருக்கு ரூ.200, ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.300 மற்றும் 80 வயது கடந்த முதியோருக்கு ரூ.500 என பிரித்துக் கொடுக்கிறது. முதியோா் உதவித் தொகையாக பயனாளி ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்குமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு விடுவித்த ஜிஎஸ்டி நிலுவையில் தமிழகத்திற்கு இரு மாதங்களுக்கு ரூ1,900 கோடி வந்துள்ளது.

ஸ்டாலின் மீது தாக்கு: உள்ளாட்சித் தோ்தல் விவகாரத்தில் திமுக தலைவா் மு,.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறாா். முதலில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தவில்லை எனக் கூறினாா். தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதிலிருந்து மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் தோ்தலை சந்திக்க அச்சம் கொண்டுள்ளது தெரிகிறது. நான்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது நிரூபமணமாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கின் இறுதித் தீா்ப்புக்கு அனைவரும் தலைவணங்குவோம். தமிழக நலனைப் பாதிக்கும் எந்த மசோதாவையும் அதிமுக எதிா்க்கும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா்-நிதித் துறை செயலாளா் எஸ் .கிருஷ்ணன், துணை செயலாளா் (நிதி) அருண் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com