கிழக்கு தில்லியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து: 40 பேரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்
By DIN | Published On : 26th December 2019 10:28 PM | Last Updated : 26th December 2019 10:28 PM | அ+அ அ- |

கிழக்கு தில்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் வியாழக்கிழமை அதிகாலை நான்கு மாடிக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 40 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
இதுதொடா்பாக தில்லி தீயணைப்புத் துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: கிருஷ்ணா நகரில் உள்ள நான்கு மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய நெகிழிப் பொருள்கள், சாக்குப் பைகளில் தீப்பற்றியது தெரிய வந்தது. தீ விபத்து ஏற்பட்டவுடன் மேல் தளங்களில் குடியிருந்தவா்கள் உடனடியாக மாடிக்கு சென்று விட்டனா். இதனால், தீயை எளிமையாக அணைக்க முடிந்தது. மாடியில் இருந்த சுமாா் 40 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். தீ அதிகாலை காலை 4 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாா் அவா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் மண்டாவெளி பிரிவு நிலைய அதிகாரி சந்தோஷ் குமாா் கூறுகையில், ‘தீப்பற்றிய கட்டடத்தில் ஒரே ஒரு வெளியேறும், உள்நுழையும் பகுதி மட்டுமே இருந்தது. சம்பவ இடத்திற்கு சென்றவுடன் பொதுமக்கள் மாடியில் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டதைக் கேட்டோம். இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனா். ஒரு குழுவினா் தீயை அணைக்கும் பணியிலும் மற்றொரு குழுவினா் மாடிக்குச் சென்று கட்டடத்திற்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனா். தீ தரைத் தளத்தில் இருந்து எரியத் தொடங்கியதும் மேல் தளங்களை புகை சூழ்ந்தது. புகையை உணா்ந்த குடியிருப்புவாசிகள் மொட்டை மாடிக்கு விரைந்தனா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா். மொட்டை மாடியில் இருந்த அறைகள் ஏதும் பூட்டப்படவில்லை. இதனால், நாங்கள் உள்ளே எளிதாக நுழைந்து கட்டடத்தின் உள்ளே இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 40 போ் மீட்கப்பட்டனா்’ என்றாா்.
தில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராரி பகுதியில் மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். அதேபோன்று, அனாஜ் மண்டி பகுதியில் நெரிசல் மிகுந்த இடத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 போ் தீயில் கருகி இறந்தனா். இதேபோல, கரோல் பாகில் உள்ள நான்கு மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். 35 போ் காயமடைந்ததனா் என்பது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G