வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்) மூலம் பொய் செய்திகள் பரவுவதை தடுப்பதற்கு பயனுள்ள தீர்வை விரைவில் கண்டறியும்படி அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் வாட்ஸ் அப் மூலம் வதந்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவது அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இரு முறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "சமூக வலைதளங்களில் முக்கியமாக கட்செவி அஞ்சலில் வதந்திகள், பொய் செய்திகள் பரவுவது குறித்து மத்திய அரசு அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த வதந்திகளும், பொய் செய்திகளும் பரவுவதை தடுக்க பயனுள்ள தீர்வை விரைவில் கண்டறிய வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் அந்நிறுவனம் கொண்டு வரும் தீர்வு பொறுப்புடைமை உள்ளதாகவும், தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது ஒரு செய்தியை மற்றொருவருக்கு அனுப்புவதில் கட்டுப்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது போன்று பொய் செய்திகள், வதந்திகளை தடுக்கவும் நல்ல தீர்வை கண்டறிய வேண்டும். இதற்கான சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக சட்ட அமைப்புகளுடன் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.