சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்துக்கு மம்தா ஆதரவு
By DIN | Published On : 12th February 2019 04:56 AM | Last Updated : 12th February 2019 04:56 AM | அ+அ அ- |

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அந்த மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு எங்கள் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி ஆதரவு அளித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையனை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் ஆதரவு தெரிவிக்குமாறு மம்தா அறிவுறுத்தினார். அதையடுத்து திங்கள்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் சந்திரபாபு நாயுடுவை டெரிக் ஓ பிரையன் சந்தித்தார். பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடுகின்றன என்று அவர் கூறினார்.
அகிலேஷ் ஆதரவு: சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்துக்கு சமாஜவாதி கட்சி தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்தார். அவரும், அவரது கட்சியினரும் சந்திரபாபு நாயுடுவுக்கு துணை நிற்பதாக சுட்டுரையில் வெளியிட்டிருந்த பதிவில் அகிலேஷ் தெரிவித்திருந்தார்.