தனியார் மருத்துவக் கல்லூரி வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: தில்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பு வாதம்
By DIN | Published On : 12th February 2019 04:54 AM | Last Updated : 12th February 2019 04:54 AM | அ+அ அ- |

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்புடைய வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சார்பில் வாதிடப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்த போது, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி, உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த, விதிகளை மீறி அனுமதி அளித்ததாக அவர் மீதும், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்லூரி நிறுவனத் தலைவர்கள் உள்ளிட்டோர் மீதும் சிபிஐ வழக்குத் தொடுத்தது.
இதனிடையே, தன் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எஸ்.மேத்தா அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சார்பில் வழக்குரைஞர் முகுல் குப்தா ஆஜராகி, "தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்புடைய வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.
மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக சுகாதாரத் துறைச் செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், உதவிச் செயலர் ஆகியோர் ஒப்புதல் அளித்த கோப்பில்தான் அன்புமணி கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட கோப்பில் எவ்வித ஆட்சேபக் கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு, இதே மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியக் குழு கல்லூரிகளை ஆய்வு செய்து, அவற்றில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இருப்பதை விடியோ ஆதாரத்துடன் பதிவு செய்தது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வித சலுகையையும் அன்புமணி வழங்கவில்லை' என்றார்.
வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்ரவரி 13) ஒத்திவைத்தார். அடுத்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.