முல்லைப் பெரியாறு: தமிழக அரசின் ஒப்புதலின்றி அணை கட்ட மாட்டோம்: உச்சநீதிமன்றத்தில் கேரளம் தகவல்
By DIN | Published On : 12th February 2019 04:51 AM | Last Updated : 12th February 2019 04:51 AM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தொடுத்த அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 366 மீட்டருக்கு கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அணை தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரியிருந்தது. இதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-இல் நிபுணர் குழு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர் சி.கே. மிஸ்ரா, அமைச்சகத்தின் (நிபுணர் மதிப்பீட்டுக் குழு) செயலர் - உறுப்பினர் எஸ். கெர்கெட்டா, கேரள தலைமைச் செயலர் டோம் ஜோஸ், தலைமைப் பொறியாளர் கே.எச். சம்ஸ்சுதீன் உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 4-இல் தொடுத்தது.
அதில், "இந்த நடவடிக்கை கடந்த 2014, மே 7-இல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே ஆஜராகி, "முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த அணையை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதி, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்பாகும்' என்றார்.
அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா குறுக்கிட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மட்டுமே தொடங்கியுள்ளோம். புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதல் தேவை. அத்துடன், உச்சநீதிமன்றத்திடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள், முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டாதபோது, எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பாகும் எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, "புதிய அணை தொடர்பாக ஆய்வு நடத்துவதே, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் 2014, மே 7-இல் அளித்த தீர்ப்பு, 2018, நவம்பர் 11-இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக அமையும். எனவே, கேரளத்தின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும்' என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசின் ஒப்புதல் தேவை; அத்துடன், உச்சநீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேரளம் தெரிவித்துள்ளது. எனவே, புதிய அணை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.