சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் அடித்துக் கொலை
By DIN | Published On : 04th January 2019 01:40 AM | Last Updated : 04th January 2019 02:55 AM | அ+அ அ- |

தில்லி அசோக் விஹார் பகுதியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
ராஜஸ்தான் மாநிலம், டாவ்சாவைச் சேர்ந்தவர் சோனு சர்மா (20). இவர் தில்லி பீம் நகர் காலனியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2018, ஏப்ரலில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தினாராம். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சோனு சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பாக பிணையில் வெளிவந்த இவர், அசோக் விஹார் பகுதியில் புதன்கிழமை அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
6 பேர் கொண்ட கும்பல் இவரைக் கொலை செய்துள்ளது. இவர்கள் அச்சிறுமியின் உறவினர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இக் கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அவர்.