சீலிங் நடவடிக்கைக்கு எதிராக சிஏஐடி தர்னா
By DIN | Published On : 04th January 2019 01:41 AM | Last Updated : 04th January 2019 02:55 AM | அ+அ அ- |

தலைநகர் தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிராக அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை தர்னா நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பிரவீண் கண்டெல்வால் பேசியதாவது:
தில்லியில் வசிக்கும் வணிகர்கள் சீலிங் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீலிங் நடவடிக்கை கடந்த 2017, டிசம்பரில் தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான கடைகளுக்கு சீல் வைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 7 லட்சம் வணிகர்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இதுபோன்ற சூழலில் வணிகர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. சீலிங் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழு அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறது. ஈவு இரக்கமற்ற முறையில் கடைகள் சீல் வைக்கப்படுகின்றன.
அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கையை வணிகர்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக வணிகம் செய்து வரும் கடைகளுக்கு சீல் வைக்கக்கூடாது. மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள மார்க்கெட் பகுதிகளில் அனைத்து விதமான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வால்டு சிட்டி, சதர் பஜார், கரோல் பாக், பஹார்கஞ்ச், தரியா கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உருமாற்றக் கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.