டூத் பிரஷை முழுங்கிய நபர்: அறுவை சிகிச்சையில்லாமல் நீக்கியது தில்லி எய்ம்ஸ்
By DIN | Published On : 04th January 2019 01:44 AM | Last Updated : 04th January 2019 01:44 AM | அ+அ அ- |

பல் துலக்கும்போது திடீரென பல் துலக்கியை (டூத் பிரஷ்) தில்லியைச் சேர்ந்த நபர் அவித் (36) என்பவர் முழுங்கியுள்ளார். வயிற்றில் சிக்கிய டூத் பிரஷ் குறித்து மருத்துவர்களிடம் அவித் தெரிவிக்காமல் இருந்ததால் அவரது வயிற்று வலியைப் போக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகள் கொடுத்துள்ளனர்.
பின்னர் சிடி ஸ்கேன் மூலம் ஏதோ ஒரு பொருள் அவித்தின் மார்பு பகுதியில் உள்ளதைக் கண்டுபிடித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்யாமல் டூத் பிரஷை நீக்கியுள்ளனர்.
இது குறித்து எய்ம்ஸ மருத்துவர்கள் கூறியதாவது:
சிமாபுரியைச் சேர்ந்த அவித் என்பவர் கடுமையான வயிற்று வலியால் ஜடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வலி நிவாரணி மருந்துகள் அளித்தும் வயிற்று வலி தீரவில்லை. இதையடுத்து, வயிற்றுப் பகுதி சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்தும் வலிக்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவரது மார்பு பகுதி சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது ஏதோ ஒரு பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர்தான் டூத் பிரஷை தான் திடீரென முழுங்கிவிட்ட உண்மையை அவித் மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு டிசம்பர் 10ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் என்டோஸ்கோபி செய்து 12 சென்டிமீட்டர் நீளம் கொண்ட டூத் பிரஷ் நீக்கப்பட்டது' என்றனர்.