தில்லியில் அடர் பனிமூட்டம்: ரயில், விமான சேவையில் பாதிப்பு
By DIN | Published On : 04th January 2019 01:39 AM | Last Updated : 04th January 2019 02:54 AM | அ+அ அ- |

தலைநகர் தில்லியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் அடர் பனிமூட்டம் காரணமாக வியாழக்கிழமையும் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் புறப்பட இருந்த விமானமும் தாமதமாக சென்றது. பனி மூட்டத்தால் தில்லி விமான நிலையம் சுமார் இரண்டு மணி நேரம் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விமான பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாக நேரிட்டது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுவின் அளவும் அதிகரித்துள்ளதுடன், பனிப்புகை மூட்டமும் தொடர்ந்து வருகிறது. மேலும், காற்றின் தரமும் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து கடுமையான பிரிவில் இருந்து வந்தது. வியாழக்கிழமை காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் மிகவும் கடுமையான பிரிவில் நீடித்த நிலையில், தலைநகர் முழுவதும் அடர் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
ரயில் சேவை பாதிப்பு: இந்நிலையில், தில்ல உள்பட வடமாநிலங்களில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரையிலும் கடும் அடர் பனிமூட்டம் நிலவியதால், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ரயில்களின் புறப்பாடு, வருகை தாமதமாகியது.
இதில் குறைந்தபட்சம் 14 ரயில்கள் சுமார் 2 - 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகச் சென்றன. பரெளனி - புது தில்லி, வைஸாலி எக்ஸ்பிரஸ், மெஹபூதி எக்ஸ்பிரஸ், ஷிவ்கங்கா எக்ஸ்பிரஸ், புரி - புதுதில்லி புருஸோத்தம் எக்ஸ்பிரஸ், ஹெளரா - புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ், பாகல்பூர் - ஆனந்த் விஹார் கரீப் ரத் எக்ஸ்பிரஸ், வாராணசி - புது தில்லி காஸி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ், நியு ஜாலபாய்குரி - புது தில்லி எக்ஸ்பிரஸ் ஆகியவை இவற்றில் முக்கியமானவை.
விமான சேவை பாதிப்பு: எப்போதும் பரபரப்புடன் காணப்படும் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அடர் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமான நிலையப் பகுதி முழுவதும் அதிகாலை முதல் பனிப்புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால், ஓடு தளத்தில் காண்பு திறன் சராசரி அளவை விட மிகவும் குறைந்தது. இதன் காரணமாக தில்லி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் 7.30 மணி முதல் 9.30 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டன. தில்லி விமான நிலையத்துக்கு வர வேண்டிய சுமார் 10 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
கடுமையான பிரிவில் காற்றின் தரம்: காற்றின் தரமும் வியாழக்கிழமை கடுமையான பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இதற்கிடையே, காற்றில் ஒட்டுமொத்த பிஎம்2.5 நுண்துகள்கள், பிஎம் 10 நுண்துகள்கள் அளவு கடுமையான பிரிவிலேயே நீடித்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சஃபர்) வெளியிட்ட தகவலில், தில்லியில் காற்றில் 2.5 நுண்துகள் அளவு 408 ஆகவும், 10 பிஎம் நுண்துகள் அளவு 306 ஆகவும் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காற்றின் தரம் கடுமையான பிரிவில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சாதகமற்ற வானிலை சூழலால், மாசு படுத்திகள் வெளியேறாததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 6.7 டிகிரி!
தலைநகர் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பருவ சராசரியை விட ஒரு டிகிரி குறைந்து 6.7 டிகிரி செல்சியஸாக நீடித்தது. புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை வெப்பநிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயர்ந்து 20.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது என்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை பாலத்தில் பருவ சராசரியைவிட 1 டிகிரி உயர்ந்து 7.9 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் பருவ சராசரியைவிட 1 டிகிரி உயர்ந்து 7.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் சஃப்தர்ஜங், பாலம் ஆகிய இடங்களில் 100 சதவீதமாகவும், ஆயாநகரில் 97 சதவீதமாகவும் இருந்தது. மாலை 5.30 மணியளவில் சஃப்தர்ஜங்கில் 65 சதவீதம், பாலத்தில் 64 சதவீதம், ஆயாநகரில் 59 சதவீதமாக இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரத் தகலில், தில்லி மற்றும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு கடுமையான அளவில் அடர் பனிமூட்டம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸுக்கும் கீழே அல்லது உறைபனி அளவுக்கு செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் வெள்ளிக்கிழமை அடர் பனி மூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.
1 இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே, காண்பு திறன் குறைந்ததால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2 தலைநகர் தில்லியில் தொடர்ந்து 5 நாள்களாக பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்து வருகிறது.
3 தில்லி, ஹரியாணா, பஞ்சாப், சண்டீகர் உள்பட வடமாநிலங்களில் குளிர் காற்று கடுமையாக வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
4 சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸுக்கும் கீழே அல்லது உறைபனி அளவுக்கு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.