புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் இன்று ஆர்ப்பாட்டம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) 21 ஆர்ப்பாட்டம் நடைபெறும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 4) 21 ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  அந்த மாநில முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார். இதில் அவரும், புதுச்சேரி அமைச்சர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. புதுச்சேரி சட்டப்பேரவையில் இது தொடர்பாக 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
ஆனால், இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசிடமும் புதுச்சேரி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிராக செயல்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சீதாராம் யெச்சூரி, டி. ராஜா, திமுகவைச் சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தவிர அதிமுகவிற்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தமட்டில் கல்வி, சுற்றுலா, சட்டம் - ஒழுங்கு, மருத்துவம் என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால், நிர்வாகத்தை செயல்படுத்த முடியாத வகையில் அங்குள்ள துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் அவரது தலையீட்டைத் தடுக்கக் கோரியும் புதுச்சேரி மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் சிறந்த வகையில் கிடைக்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் நானும், புதுச்சேரி அமைச்சர்களும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்திற்கு முன்பு 90 சதவீத மானிய நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 30 சதவீதம் மட்டுமே கிடைத்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் நாட்டிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com