ஆம் ஆத்மி அதிருப்தி தலைவர் சுக்பால் சிங் கெய்ரா விலகல்

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவரும், பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான சுக்பால் சிங் கெய்ரா அக்கட்சியிலிருந்து முறைப்படி விலகினார்.

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி தலைவரும், பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான சுக்பால் சிங் கெய்ரா அக்கட்சியிலிருந்து முறைப்படி விலகினார்.
ஆம் ஆத்மியின் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எச்.எஸ்.பூக்லா கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகினார். இந்நிலையில், சுக்பால் சிங் கெய்ரா ஞாயிற்றுக்கிழமை விலகியுள்ளது கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 ஆம் ஆத்மிக் கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களில் சுக்பால் சிங் கெய்ராவும் ஒருவர். பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எச்.எஸ்.பூக்லா சீக்கியக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக சுக்பால் சிங் கெய்ரா நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் கடந்த நவம்பரில் அவர் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருடன் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் விலகி தனியாக செயல்பட்டனர். இந்நிலையில், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அவர் விலகியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை பஞ்சாப் ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இது தொடர்பாக ஆம் ஆத்மிக் கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின்அமைப்பில் இருந்து பிரிந்து ஆம் ஆத்மிக் கட்சி தொடங்கிய போது கட்சிக்கு இருந்த கொள்கைகள் எதுவுமே இப்போது இல்லை. ஆம் ஆத்மித் தலைவரான நீங்கள் (கேஜரிவால்) சர்வாதிகார மனப்பான்மையுடன் இயங்கி வருகிறீர்கள். 
மற்றைய கட்சிகள் போல ஆம் ஆத்மி கட்சியிலும் அதிகாரப் படிநிலை உள்ளதை கட்சியில் இணைந்த பின்னரே உணர்ந்து கொண்டேன். இந்நிலையில், கட்சியில் நீடிப்பதில் அர்த்தம் இல்லை என்று கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 
 

எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்ய வேண்டும்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய சுக்பால் சிங் கெய்ராதனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரைப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: 
சுக்பால் சிங் கெய்ராவின விலகல் எதிர்பார்த்ததே. அவருடைய விலகல் மூலம் கட்சி மேலும் பலம் பெறவே செய்யும். ஆம் ஆத்மிக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்ய வேண்டும். பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கியதில் இருந்து அவர் கட்சிக்கெதிராகச் செயல்பட்டு வருகிறார். ஆம் ஆத்மி ஏழை, விளிம்புநிலை மக்களுக்காக பணியாற்றி வருகிறது. இதில் மாற்றுக் கருத்துள்ளவர்கள் கட்சியை விட்டு விலகலாம். கட்சியை இரண்டாக உடைக்க நினைத்தவரை கட்சித் தலைமை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அதிகாரம், பதவிக்காக கட்சியில் இணைந்து கொண்டவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் எப்போதும் கூறி வருகிறார். பதவி, அதிகாரத்தை இலக்கு வைத்தே சுக்பால் சிங் கெய்ரா இயங்கி வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com