தில்லியில் மழையால் குறைந்தது காற்று மாசு!

புத்தாண்டுக்குப் பிறகு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களிலும் பரவலாக

புத்தாண்டுக்குப் பிறகு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காற்று மாசு அளவு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்து மீண்டும் கடுமையான பிரிவுக்குச் சென்ற நிலையில், மழை ஓரளவுக்கு மாசுவைத் தணிக்க உதவியுள்ளது. 
தில்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசுவின் அளவு ஏற்ற இறக்குத்துடன் இருந்து வந்தது. பல நாள்களில் மாசுவின் அளவு அதிகரித்து கடுமையான பிரிவுக்கும், மிகவும் மோசமான பிரிவுக்கும் இடையே நீடித்து வந்தது. மழை இல்லாததாலும் காற்றின் வேகம் குறைந்ததாலும் மாசுபடுத்திகளை பரவச் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதால், இந்த நிலை நீடித்து வந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
சனிக்கிழமை காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நகரின் பல்வேறு இடங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. தில்லி ராஜபாதை, பிரஸ் கிளப் இந்தியா, கிழக்கு தில்லியில் மயூர் விஹார், லக்ஷ்மி நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழை காணப்பட்டது. இதனால், நகரில் குளிர்ந்த காற்று வீசியது. இதன்காரணமாக வீடின்றி சாலையோரம் வசிக்கும் மக்கள் குளிர்ந்த காற்றால் அவதியுற்றனர். வரும் நாள்களில் குளிர் காற்று அதிமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் வீடில்லாத பலரும் இரவுநேரக் குடில்களை நாடிச் சென்றுள்ளனர்.
 மழை பெய்த போதிலும் காற்றில் மாசு அளவு பெரிய அளவில் குறையவில்லை. கடுமை எனும் பிரிவில் இருந்து மிகவும் மோசம் எனும் பிரிவுக்கு கீழறங்கியுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவலின்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 347 என பதிவாகியிருந்தது.
ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 100 முதல் 200 வரை இருந்தால் காற்றின் தரம் மிதமான பிரிவிலும், 201 - 300 மோசம், 301 - 400 மிகவும் மோசம், 401 - 500 என இருந்தால் காற்றின் தரம் கடுமையான பிரிவிலும் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறு.
தலைநகரில் 31 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் "மிகவும் மோசம்' எனும் பிரிவிலும், இரண்டு இடங்களில் "மோசம்' எனும் பிரிவிலும் பதிவாகி இருந்தது. தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் காஜியாபாத், ஃபரீதாபாத், குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் "மிகவும் மோசம்' எனும் பிரிவில் பதிவாகி இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மழைக்குப் பிறகு தில்லியில் காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு அடைந்து இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் முதல் முறையாக காற்றின் தரம் "மிகவும் மோசம்' பிரிவில் குறைவான புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் அளவு 197 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் அளவு 312 ஆகவும் பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மத்திய அரசின் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) வெளியிட்ட தகவலின்படி, தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு "மிகவும் மோசம்' பிரிவில் பதிவாகி இருந்தது. அடுத்த இரு நாள்களுக்கு தில்லியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்றும், தில்லி உள்பட வட பிராந்தியங்களில் ஈரப்பதம் பரவுவதற்கு மேற்கிலிருந்து வரக்கூடிய வானிலை சூழல் காரணமாக இருக்கலாம். அடுத்த மூன்று தினங்களுக்கும் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலேயே தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சஃபர் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மழை அளவு 4.23 மி.மீ., பாலத்தில் 1.4 மி.மீ., லோதி ரோடி, ஆயாநகர், ரிட்ஜ் ஆகிய இடங்களில் முறையே 4 மி.மீ., 3 மி.மீ., 3.4 மி.மீ. என பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயர்ந்து 8.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com