அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
By DIN | Published On : 03rd July 2019 08:01 AM | Last Updated : 03rd July 2019 08:01 AM | அ+அ அ- |

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ஏ.ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், ஏ. பிரபு ஆகிய மூவருக்கு எதிராக விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 3) நடைபெறவுள்ளது.
அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்று வருவதாகவும் கடந்த ஆண்டு அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் பேரவைத் தலைவரிடம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சில புகைப்படங்களை ஆதாரங்கள் எனக் கூறிஅந்த மூன்று பேர் மீது மீண்டும் கடந்த மாதம் 26-ஆம் தேதி புகார் மனு அளித்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால், மூன்று எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் இறுதியில் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், ஏ. பிரபு ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மூன்று எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக சட்டப்பேரவைச் செயலர் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆஜராகி, "இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் 54-ஆவது வழக்காக விசாரணைக்கு வருகிறது.