வேலையின்மைப் பிரச்னைக்குத் தீர்வு காண பட்ஜெட்டில் சிறப்புத் திட்டம்: மத்திய நிதியமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd July 2019 08:03 AM | Last Updated : 03rd July 2019 08:03 AM | அ+அ அ- |

நாட்டில் வேலையின்மைப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய பட்ஜெட்டில் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் வேலையின்மைப் பிரச்னை 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. அதற்குத் தீர்வு காண, வரும் பட்ஜெட்டில் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். விவசாயிகள் இடர்பாட்டில் உள்ளனர். அவர்களில் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். அதனால், பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வேண்டும். வருமான வரி அடிப்படை விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக அதிகரிக்க வேண்டும். அனைத்துக் கூரை வீடுகளை நிரந்தர வீடுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் ஒவ்வொரு வட்டாரத்திலும் எஸ்சி மாணவிகள், மாணவர்கள் ஆகியோருக்காக சிறப்பு பள்ளிகளைத் தொடங்க 2008-இல் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்திருந்தது. முந்தையஅரசுகள் அதை நிறைவேற்றவில்லை. வரும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்காகவும், தமிழகத்தில் நவீன நகரங்கள் திட்டங்களை முடிக்கவும் போதிய நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்க வேண்டும். நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், அனைவருக்கும் அடிப்படை வருவாய் திட்டம் போன்ற ஒரு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.