கொலை வழக்குகளில் தேடப்பட்ட 2 சகோதரர்கள் கைது
By DIN | Published On : 09th June 2019 12:05 AM | Last Updated : 09th June 2019 12:05 AM | அ+அ அ- |

இரண்டு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த சகோதரர்கள் இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: தில்லி புதிய சீலம்பூரை சேர்ந்தவர்கள் சல்மான் (24), நஜீம் (23). சகோதரர்களான இருவரும் பிரபல நஸீர் கும்பலைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர்.
மேலும், அவர்களைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு வெகுமதியாக முறையே ரூ.1 லட்சம், ரூ.50,000 அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், இருவரும் பூசா சாலையில் உள்ள முக்மெய்பூரில் ஒருவரை சந்திக்க வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது அந்தப் பகுதியில் வந்த சல்மான், நஜீம் ஆகிய இருவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து, போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது, அவர்கள் வடகிழக்கு தில்லி, உஸ்மான்பூரில் வேறு ஒரு கும்பலின் தலைவரான ரேஹனின் சகோதரர் ஹக்கிமுதீனை கொன்றுள்ளனர்.
இதேபோல, இருவரும் சேர்ந்து ரேஹனுக்கு நிதியுதவிகளை அளித்து வந்த சர்ப்ராûஸ சுட்டுக் கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.