பத்திரிகையாளர்கள் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு
By DIN | Published On : 09th June 2019 11:59 PM | Last Updated : 09th June 2019 11:59 PM | அ+அ அ- |

தில்லியில் தனியார் செய்தி தொலைக்காட்சியின் பத்திரிகையாளர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் செய்திச் சேனலின் நிருபர் சித்தார்த் புரோஹித் ஒளிப்பதிவாளர் அர்விந்த் குமார், ஓட்டுநர் சந்தர் சென் ஆகியோருடன் பிரசாத் நகர் காவல் நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது பாராபுல்லா மேம்பாலச் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து சித்தார்த் புரோஹித் கூறுகையில், "எங்கள் வாகனம் பிரகதி மைதான் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, கருப்பு நிற பல்சர் மோட்டார்சைக்கிள் நெருங்கி வந்தது. அப்போது, அதில் இருந்தவரின் கையில் துப்பாக்கி இருந்ததைப் பார்த்தோம். இதனால், காரை வேகமாக ஓட்ட முயற்சித்தோம். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த நபர் எங்கள் வாகனத்தின் மீது மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். முதல் துப்பாக்கிக் குண்டு காரின் கதவிலும், இரண்டாவது குண்டு ஓட்டுநர் பக்கம் இருந்த ஜன்னல் பகுதியையும் தாக்கியது. மூன்றாவது குண்டு குறி தவறிச் சென்றுவிட்டது' என்றார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அர்விந்த் குமார் கூறுகையில், "இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸாருக்கு காலை 1.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தோம். ஆனால், காவல் கட்டுப்பாட்டு அறை வாகனம் மூன்று மணிக்குத்தான் வந்தது' என்றார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல் துறையினர் கொள்ளை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தெற்கு தில்லி கூடுதல் காவல் துணை ஆணையர் பர்விந்தர் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரைப் பிடிக்க தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லி காவல் துறையில் இருந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பைக் நுழைந்த மற்றும் வெளியேறிய பகுதிகள் குறித்து கண்டறிய முயன்று வருகிறோம். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வாகனம் தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
3 போலீஸார் பணியிடை நீக்கம்
பத்திரிகையாளர்கள் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த பின்பும் 2 மணி நேரம் தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்ததாக 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மற்றொரு காவல் அதிகாரி தெரிவித்தார்.