மின் தடை: மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
By DIN | Published On : 09th June 2019 12:06 AM | Last Updated : 09th June 2019 12:06 AM | அ+அ அ- |

தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக சனிக்கிழமை மாலையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) அதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லியில் உள்ள சமய்பூர் பாத்லிக்கும் குருகிராமில் உள்ள ஹூடா சிட்டிக்கும் இடையே மெட்ரோவின் மஞ்சள் வழித்தடம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த வழித்தடத்தில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரையிலும் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உத்யோக் பவன் மற்றும் மாடல் டவுன் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர், சிறிது நேரம் கழித்து ரயில் சேவை தொடங்கியது. தற்போதைக்கு இரண்டு தனித்தனி வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற வழித்தடங்களில் ரயில் சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றார் அந்த அதிகாரி.
இதுதொடர்பாக டிஎம்ஆர்சி தனது சுட்டுரைப் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளது. அதில், இந்த வழித்தடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. டிஎம்ஆர்சி பொறியாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.