இளைஞரை சுட்டதாக 4 பேர் கைது
By DIN | Published On : 14th June 2019 06:34 AM | Last Updated : 14th June 2019 06:34 AM | அ+அ அ- |

தில்லி கரோல் பாக் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மத்திய மாவட்டக் காவல் துணை ஆணையர் மந்தீப் எஸ். ரந்தவா கூறியதாவது: ஜூன் 2-ஆம் தேதி கரோல் பாக் காவல் நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது. அதில் அப்பகுதியில் இளைஞர் ஒருவர் குண்டுக் காயமடைந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த பரத், அவரது இரு நண்பர்கள் தெருக் கடையில் உட்கார்ந்திருந்த போது இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார்சைக்கிளில் அந்த இடத்திற்கு வந்து பரத் மீது சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டது தெரிய வந்தது. இதில் பரத்துக்கு மூன்று இடங்களில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஆர்எம்எல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக கரோல் பாக் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த கொலை முயற்சி சம்பவத்தில் சராய் ரோஹில்லா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் ( 26), சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆகாஷ் (25), கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த தேவ் அர்ஜுன் (24), மஹேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மகேஷ் குமார் , தேவ் அர்ஜுன் ஆகியோர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதும், இவர்களது கூட்டாளியான ஆகாஷ் குமார், ஆகாஷ் ஆகியோர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் வந்து பரத்தை சுட்டு விட்டு தப்பியோடியதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக காவல் உயர் அதிகாரி மந்தீப் ரந்தவா தெரிவித்தார்.