ரயில்களில் மசாஜ் சேவை: பாஜக எம்.பி. எதிர்ப்பு
By DIN | Published On : 14th June 2019 06:34 AM | Last Updated : 14th June 2019 06:34 AM | அ+அ அ- |

ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் சேவை அளிக்கும் ரயில்வேயின் திட்டத்துக்கு இந்தூர் தொகுதி பாஜக எம்.பி. சங்கர் லால்வணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் அண்மையில் அளித்த பேட்டியில், ரயில்வே துறைக்கு கூடுதலாக வருமானம் ஈட்டும் நடவடிக்கையில் ஒன்றாக, ரயில்களில் பயணிகளுக்கு மசாஜ் சேவை அளிப்பதற்கு ரயில்வே திட்டம் தீட்டியிருப்பதாகவும், விரைவில் 39 ரயில்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்தூர் தொகுதி பாஜக எம்.பி.யான சங்கர் லால்வணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இந்திய கலாசாரத்தின்படி வாழ்ந்து வரும் பெண்கள், ரயில்களில் பயணிப்பார்கள். அவர்களின் முன்பு வைத்து, மசாஜ் சேவை அளிக்கப்பட இருக்கிறதா?
ரயில்களில் வரும் பயணிகளுக்கு மருத்துவ உதவி, மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஆனால் இந்த தரம்குறைந்த சேவை, பயணிகளுக்கு தேவையில்லை என்பது எனது அபிப்ராயமாகும். ரயிலில் வரும் பயணிகள், 3 அல்லது 4 மணி நேரம்தான் அதில் பயணிப்பர். அத்தகைய பயணிகளுக்கு மசாஜ் சேவை அவசியம் தேவையா? நிச்சயம் தேவையில்லை. ரயில்வேயின் திட்டம் குறித்து பல்வேறு பெண்கள் அமைப்பினரும் புகார்கள் அளித்துள்ளனர் என்று அந்தக் கடிதத்தில் சங்கர் லால்வணி குறிப்பிட்டுள்ளார்.