விவசாயிகள் நிதியுதவித் திட்டம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
By DIN | Published On : 14th June 2019 06:32 AM | Last Updated : 14th June 2019 06:32 AM | அ+அ அ- |

பிரதமர் விவசாயிகள் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்த விவசாயப் பயனாளிகளை சேர்க்கும் பணியை துரிதப்படுத்தும்படி, அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தில்லியிலிருந்தபடி பல்வேறு மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்களுடன், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விடியோ கான்பரன்சிங் மூலம் வியாழக்கிழமை உரையாடினார். அப்போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது:
அடுத்த 100 நாள்களில், இந்தத் திட்டத்தில் ஒரு கோடி விவசாயிகளை சேர்க்க வேண்டும். இதற்காக கிராம அளவிலான பிரசாரங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் மேற்கொள்ள வேண்டும்.
இப்படி செய்வதன் மூலமாக, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்துக்கு அளிக்கப்படும் நிதியுதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடியும் என்றார் அவர்.
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகையை 3 தவணைகளாக பிரித்து வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 14.5 கோடி ஏழை விவசாயிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.6,000 உதவித் தொகையில் முதல்கட்டமாக ரூ.2,000 தொகையை 3.30 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு டெபாசிட் செய்தது. 2ஆவது கட்டமாக விரைவில் 2.70 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உதவித் தொகையை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரூ.87,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
14.5 கோடி விவசாயிகளில் 6.92 கோடி பேர் மட்டுமே, இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். எஞ்சிய விவசாயிகளையும் இத்திட்டத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தத் திட்டத்தை கால்நடை வளர்ப்போர், மீன்வளர்ப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.