தண்ணீர் பிரச்னை குறித்த விவாதத்துக்கு தயாரா? கேஜரிவாலுக்கு விஜய் கோயல் சவால்

கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை தில்லி சந்தித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள்

கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை தில்லி சந்தித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல், இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பொது விவாதம் நடத்த தயாரா? என சவால் விடுத்துள்ளார்.
தில்லியின் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தில்லி ஜல் போர்டு தலைமை அலுவலகத்தை விஜய் கோயல் தலைமையிலான பாஜகவினர் 10 மணி நேரம் முற்றுகையிட்டு விடியவிடிய நடத்திய போராட்டம் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் முடிவடைந்தது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அலுவலகத்துக்கு உள்ளேயே தில்லி ஜல் போர்டு தலைமைச் செயல் அதிகாரி குமாரை போலீஸார் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
இந்தப் போராட்டத்தின்போது பாஜகவினர் தில்லி ஜல் போர்டு அலுவலத்தை சேதப்படுத்தியதாக தில்லி ஜல் போர்டின் துணை தலைவர் மொஹனியா மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மெஹனியா ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் விஜய் கோயல் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லி கடுமையான தண்ணீர் பஞ்சத்தைச் சந்தித்து வருகிறது. ஆனால் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு  தூங்கிக் கொண்டு இருக்கிறது. எங்கள் குற்றச்சாட்டுகளுக்கு தில்லி ஜல் போர்டு அதிகாரிகள் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. நாங்கள் எழுப்பிய விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மட்டும் தில்லி ஜல் போர்டு தலைமைச் செயலர் அதிகாரி எழுத்துபூர்வமான உறுதியை அளித்தார். ஆனால், தில்லி ஜல்போர்டின் துணைத் தலைவர் மொஹனியா இந்த விவகாரத்தில் பொய் சொல்கிறார்.
தில்லி ஜல்போர்டு விநியோகிக்கும் அசுத்தமான தண்ணீரால் தில்லிவாசிகளின்  உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தில்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்னை தீரும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் என்னுடன் பொது விவாதம் நடத்த தயாரா?  என்றார்.
இதனிடையே, தில்லியில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மா வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com