உலகில் மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் இந்தியாவில் 15! முதல் இடத்தில் குருகிராம்; 11-ஆவது இடத்தில் தில்லி

உலகில் மாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் 15 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

உலகில் மாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் 15 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் குருகிராம், காஜியாபாத், ஃப்ரீதாபாத், நொய்டா, பிவாடி ஆகியவை முதல் ஆறு இடங்களில் உள்ளன. உலகிலேயே மிகவும் மாசடைந்த தலைநகரமாக தில்லி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
கடந்த ஆண்டு தொகுக்கப்பட்ட இந்தப் புதிய அறிக்கையின்படி, தேசியத் தலைநகர் வலயம் மிகவும் மாசடைந்த பகுதியாக உருவெடுத்துள்ளது. அதாவது, 2018-ஆம் ஆண்டில் சராசரியாக தில்லியில் மாசு நுண்துகள் பிஎம் 2.5 ஒரு கன மீட்டரில் 113.5 மைக்ரோகிராம்கள் என இருந்தது. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 97.1 மைக்ரோகிராம்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 61.8 மைக்ரோகிராம்கள் என இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த நகரங்கள் பட்டியலில் குருகிராம் முதல் இடத்திலும் (135.8 மைக்ரோகிராம்கள்), தில்லி 11-ஆம் இடத்திலும் உள்ளது. 
உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களை தரவரிசைப்படுத்தி "ஐக்யூஏர் ஏர் விஷுவல் 2018 வேர்ல்டு ஏர் குவாலிடி' புள்ளிவிவர ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கிரீன்பீஸ் தென்கிழக்கு ஆசியா அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
 இதில் கடந்த ஆண்டின் போது பிஎம் 2.5 நுண்துகள் மாசு நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் மிகவும் மாசடைந்த 20 நகரங்களில் 18 நகரங்கள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள் மாசடைந்தவையாக உள்ளன. குறிப்பாக குருகிராம், காஜியாபாத் ஆகியவை மிகவும் மாசடைந்த நகரங்களாக உள்ளன. அவற்றைத் தொடர்ந்து, ஃபரீதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை முதல் ஆறு இடங்களில் உள்ளன. தில்லி 11-ஆம் இடத்தில் உள்ளது. உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த சீனாவின் தலைநகர் பெய்ஜிங், கடந்த ஆண்டுக்கான நுண்துகள் பி.எம். 2.5 பட்டியலில் 122-ஆவது இடத்தில் உள்ளது. 
 இந்தப் புதிய ஆய்வு அறிக்கையானது சுற்றுப்புற காற்றின் தர மாசுக்கான காரணங்கள் அல்லது முக்கிய ஆதாரங்களாக சிலவற்றைக் கண்டறிந்துள்ளது. அதன்படி, இவற்றுக்கு தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் காற்று நச்சுகள் ஆகியவை காரணமாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உடல் நலத்திற்கு தீங்கு இழைப்பவை. இந்த மாசுபடுத்திகளில் நுண்துகள்கள் மனித உடல் நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன. எரிபொருள் எரிக்கப்படுவதால் மிகவும் சிறிய நுண்துகள்கள் வெளியேறுகின்றன. வாகனங்கள், மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், விவசாயம் அல்லது பயோமாஸ் எரிப்பு ஆகியவற்றில் இருந்து இந்த நுண்துகள்கள் வெளியேறுகின்றன என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் இந்தியாவைச் சேர்ந்த ஆர்வலர் புஜாரி சென் கூறுகையில், "இந்த அறிக்கை என்பது கண்ணுக்குத் தெரியாத கொலையாளியைக் குறைப்பதற்கான நமது செயல்பாடுகள், முயற்சிகள் ஆகியவற்றை நமக்குச் சுட்டிக்காட்டும் ஒரு நினைவூட்டலாகும். இந்திய மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க நாம் விரும்பினால், தேசிய தூய காற்றுத் திட்டம், தரவரிசைப்படுத்தப்பட்ட நடவடிக்கைச் செயல் திட்டம் போன்ற திட்டங்களை மிகவும் கடுமையாகவும், வேகமாகவும், சட்டத்திற்கு உள்பட்டும் செயல்படுத்தப்பட வேண்டும். அரசியல் அறிக்கைக்கு பயன்படுத்தப்படுவதைவிட அடிப்படை அளவில் செயல்படுத்தப்பட வேண்டும்' என்றார்.
 "கேர் ஃபார் ஏர்' எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜோதி பாண்டே லாவகாரே கூறுகையில், "தில்லி மற்றும் அருகில் உள்ள நகரங்கள் உலகில் மிகவும் மாசு நிறைந்த நகரங்களாக இடம் பெற்றுள்ளன. காற்றைத் தூய்மைப்படுத்த போர்க்கால அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை நாம் மேற்கொள்ளாவிட்டால் தில்லி தொடர்ந்து மிகவும் மாசு நிறைந்த நகரமாகவே நீடிக்கும். எனவே, இதற்கான திடமான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். மேலும், இது தேசியப் பொது சுகாதார அவசர நிலையாகும். இந்த விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்' என்றார். 

மாசடைந்த 20 நகரங்களின் பட்டியல் 
(காற்று தரக் குறியீடு)

குருகிராம்     -    இந்தியா     (135.8)
காஜியாபாத்     -    இந்தியா     (135.2)
ஃபைசலாபாத்     -    பாகிஸ்தான்     (130.4)
ஃப்ரீதாபாத்     -     இந்தியா     (129.1)
பிவாடி     -     இந்தியா     (125.4)
நொய்டா     -     இந்தியா     (123.6)
பாட்னா     -     இந்தியா     (119.7)
ஹோட்டன்     -     சீனா     (116)
லக்னௌ     -      இந்தியா     (115.7)
லாகூர்     -     பாகிஸ்தான்     (114.9)
தில்லி     -     இந்தியா     (113.5)
ஜோத்பூர்     -     இந்தியா     (113.4)
முசாஃப்பர்பூர்     -     இந்தியா     (110.3)
வாராணசி     -     இந்தியா     (105.3)
முராதாபாத்     -     இந்தியா     (104.9)
ஆக்ரா     -     இந்தியா     (104.8)
டாகா     -     வங்கதேசம்     (97.1)
கையை     -     இந்தியா     (96.6)
காஷ்கர்     -     சீனா     (95.7)
ஜிந்த்     -     இந்தியா     (91.6)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com