கேஜரிவால் பின்லேடனாக மாறியிருப்பார்: ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ
By DIN | Published On : 06th March 2019 11:53 PM | Last Updated : 06th March 2019 11:53 PM | அ+அ அ- |

ஒரு தாக்குதல், ஒருவரை பயங்கரவாதியாக மாற்றுமெனில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எப்போதோ ஒசாமா பின்லேடனாக மாறியிருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா கூறியிருக்கிறார்.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கபில் மிஸ்ரா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:
நாட்டில் சில போலி சமதர்மவாதிகளும், போலி மதச்சார்பின்மை தலைவர்களும் உள்ளனர். அவர்கள், புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார்கள். புல்வாமாவில் தற்கொலை தாக்குதல் நிகழ்த்திய அடில் அகமது தாரை ஒரு முறை போலீஸார் தாக்கினார்களாம். அதன் பிறகுதான், அவர் பயங்கரவாதியாக மாறினாராம்.
அப்படிப் பார்த்தால், தில்லி முதல்வர் கேஜரிவால் எப்போதோ ஒசாமா பின்லேடனாக மாறியிருக்க வேண்டும். (2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தில்லி, ஹரியாணாவில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கேஜரிவாலை சிலர் அறைந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டார்).
நக்ஸல்களும், கம்யூனிஸ்டுகளும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டும் வரவில்லை. இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) இருந்தும் பயின்று வெளியே வருகிறார்கள். அப்படி வெளியே வந்த ஒரு நக்ஸல் தீவிரவாதியுடன் நான் மோதிக் கொண்டிருக்கிறேன். (கேஜரிவால், ஐஐடியில் படித்தவர் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சில போலி சமதர்மவாதிகளும், போலி மதச்சார்பின்மைவாதிகளும் போர் வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். கடந்த 1,400 ஆண்டு கால வரலாற்றில், இந்தியா பலமுறை போரை சந்தித்திருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது நாம் போரில் ஈடுபட்டு, வெற்றிபெற வேண்டும் என்றார் அவர்.