புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்: விசாரணை ஆணையம் அமைக்க கோரிய மனு தள்ளுபடி
By DIN | Published On : 06th March 2019 06:12 AM | Last Updated : 06th March 2019 06:12 AM | அ+அ அ- |

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ராணுவப் புலனாய்வுத் துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவற்றின் உதவியுடன் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தலா ரூ. 2 கோடி இழப்பீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் ஜெய் சுகின் ஆஜரானார். மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.