உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இரட்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள "அக்வா' லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனம் (என்எம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 10,999 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருவதாக என்எம்ஆர்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக என்எம்ஆர்சி புள்ளி விவரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழித்தடம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கடந்த மார்ச் 25 -ஆம் தேதி வரையிலான காலத்தில் (இரண்டு மாதங்கள்) மொத்தம் 6.48 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 10,991 பேர் பயணம் செய்துள்ளனர்.
வழித்தடம் தொடங்கப்பட்ட மார்ச் மாதத்தில் மொத்தம் 3.24 லட்சம் பேர் பயணம் செய்தனர். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு பயணிகள் எண்ணிக்கை 10,458 ஆக இருந்தது. இதில் மார்ச் 15-ஆம் தேதி அன்று மட்டும் 17,164 பேர் பயணம் செய்துள்ளனர். இதுதான் இந்த இரண்டு மாதங்களில் மெட்ரோவில் அதிகம் பேர் பயணம் செய்த நாளாகும்.
இதேபோன்று முதல் மாதத்தில் ரூ.1.02 கோடியாக இருந்த வருவாய், இரண்டு மாதங்களில் ரூ.1.99 கோடியாக உயர்ந்துள்ளது. முதல் நாளிலிருந்து இதுவரை மொத்தம் 12,828 மெட்ரோ பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளன. மேலும், இரண்டு மாதங்களில் 4,89,361 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் நொய்டா - கிரேட்டர் நொய்டாவை இணைக்கும் வகையில் ரூ.5,503 கோடியில் அக்வா வழித்தடம் அமைக்கப்பட்டது. 29.7 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 21 ரயில் நிலையங்கள் உள்ளன.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை என்எம்ஆர்சி வழங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணி முதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்பாட்டில் இருக்கும். ரயில் சேவை இரவு 10 மணி வரையிலும் இருக்கும்.
இந்த வழித்தடத்தில் 10 ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 163 முறை ரயில்கள் சென்று வருகின்றன. மேலும், உச்ச நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும், மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடத்தில் ரயில்கள் 99.99 சதவீதம் சரியான நேரத்திக்கு சென்று வருகின்றன. செக்டார் 51, செக்டார் 76, என்எஸ்ஈஇஸட், நாலேட்ஜ் பார்க்-ஐஐ, பாரி செளக் ஆகிய ரயில் நிலையங்களில் அதிகமான பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அந்த புள்ளி விவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்சில் - 3.24 லட்சம் பேர் பயணம்
நாள் ஒன்றுக்கு - 10,458 பேர் பயணம்
மார்ச் 15இல் - 17,164 பேர் பயணம்
பயண அட்டைகள் - 12,828 விற்பனை
டிக்கெட்டுகள் - 4,89,361 விற்பனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.