இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சப் புகார்: வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
By DIN | Published On : 28th March 2019 05:57 AM | Last Updated : 28th March 2019 05:57 AM | அ+அ அ- |

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய மேல் முறையீட்டு மனுவை விசாரித்த வந்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி சுனில் கௌர் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக புதன்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி வேறு ஒரு அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கெளர் அமர்வில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் சார்பில் வழக்குரைஞர்கள் அரவிந்த் நிகம், எஸ். ஹரிகரண் ஆகியோர் ஆஜராகி, "இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி. குமாருக்கு எதிராக பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தடை விதித்துள்ளது. இதுபோல, டிடிவி தினகரனுக்கு எதிராக நடைபெறும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரினர். இதையேற்றுக் கொண்ட நீதிபதி, டிடிவி தினகரனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 20-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த மனு கடந்த மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அதுவரை டிடிதி தினகரனுக்கு எதிரான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் கெளர் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாகவும், இந்த வழக்கை வேறொரு அமர்வு ஏப்ரல் 1-ஆம் தேதி விசாரிக்கும் எனவும் நீதிபதி சுனில் கெளர் தெரிவித்தார்.
பின்னணி: அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், டி.பி. மல்லிகார்ஜுனா, பி. குமார் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை குற்றத் தடுப்புப் பிரிவு சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 17-இல் பதிவு செய்தது. இதற்கு எதிராக சுகேஷ் சந்திரசேகர், டி.பி. மல்லிகார்ஜுனா, பி. குமார் ஆகிய மூவரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...