தில்லி பாஜக புதிய வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலில் கௌதம் கம்பீர்?
By DIN | Published On : 28th March 2019 05:58 AM | Last Updated : 28th March 2019 06:03 AM | அ+அ அ- |

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களின் புதிய பரிசீலனைப் பட்டியில் அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் உள்பட 10 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்துடன் முந்தைய பட்டியலில் இருந்த 21 பெயர்களுடன் சேர்த்து மொத்தம் 31 வேட்பாளர்களை அக்கட்சி தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளும் தற்போது பாஜக வசம் உள்ளது. தில்லியில் மக்களவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்தவார இறுதியில் தில்லி பாஜக தேர்தல் குழு தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிக்கும் தலா மூன்று பேர் வீதம் தேர்வு செய்து வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலைத் தயாரித்தது. அதில் 21 பேர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அந்தப் பட்டியல் கட்சித் தலைமையிடம் அளிக்கப்பட்டது. அப்போது, பதவிக்காகவும், தேர்தலில் நிற்பதற்காகவும் மட்டுமே கட்சியில் புதிதாக சேர்ந்த பிரபலங்களை வேட்பாளராகத் தேர்வு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது கட்சியின் தேசிய தலைமைக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. ஆனால், 21 பேர் அடங்கிய அந்தப் பட்டியலில் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம் பெறாததால், அந்தப் பட்டியலை கட்சித் தலைமை நிராகரித்தது. மேலும், பிரபலங்களின் பெயர்களையும் சேர்த்து புதிய பட்டியலைத் தயாரித்து வழங்கும்படி கேட்டுக் கொண்டதாக தில்லி பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
முன்னதாக, பாஜகவின் தேர்தல் குழு அண்மையில் வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலை தயாரித்திருந்தது. அதில் தற்போதைய எம்பியும், பாஜகவின் தில்லி தலைவருமான மனோஜ் திவாரி, தற்போதைய பாஜக எம்பிக்கள் உள்பட 21 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. அந்தப் பட்டியல் அண்மையில் கட்சித் தலைமையிடம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்டியலை நிராகரித்த கட்சித் தலைமை, மேலும் அதிகமானோர் கொண்ட இறுதிப் பட்டியலைத் தயாரித்து வழங்கும்படி கேட்டுக் கொண்டது.
கெளதம் கம்பீர் பாஜகவில் இணைவதற்கு முன்பு, முதல் வேட்பாளர்கள் பரிசீலனைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த அவர், தில்லி ஐ.பி.எல். அணி உருவாக்கப்பட்ட போது கேப்டனாவும் செயல்பட்டிருக்கிறார். தில்லி அவருக்கு சொந்த ஊர் என்பதால், அவரை தேர்தலில் நிறுத்தினால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பாஜக கருதுகிறது. இந்நிலையில், கௌதம் கம்பீர் கடந்த வாரம்தான் பாஜகவில் இணைந்தார். புதுதில்லி மக்களவை தொகுதியில் அவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு மீனாட்சி லேகி உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், புதிய வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலில் கெளதம் கம்பூர் உள்பட மேலும் 10 பேர் இடம் பெற்றுள்ளதாகவும், இந்தப் பட்டியல் விரைவில் கட்சியின் தேசியத் தலைமைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தில்லி பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
புதுதில்லி - புதுதில்லி தொகுதிக்கான முதல் வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலில் மீனாட்சி லேகி, மோனிகா அரோரா, ராஜேஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், கெளதம் கம்பீர் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ரவீந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய் ஆகியோரின் பெயர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களையும் சேர்த்து புதிய பட்டியலில் மொத்தம் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வடமேற்கு தில்லி - வடமேற்கு தில்லி (தனி) தொகுதிக்கான பட்டியலில் மோகன்லால் ஜிகாரா, யோகேந்தர் சந்தோலியா, ரவீந்தர் இந்தர் ராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே அளித்த பட்டியலில் தற்போதைய எம்பி உதித்ராஜ், அனிதா ஆர்யா, அசோக் பிரதான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இத்தொகுதிக்கான புதிய பட்டியலில் இப்போது மொத்தம் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு தில்லி - மேற்கு தில்லி தொகுதிக்கான பட்டியலில் தற்போதைய எம்பி பர்வேஷ் வர்மா, பவன் சர்மா, கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வடகிழக்கு தில்லி - வடகிழக்கு தில்லி தொகுதிக்கான வேட்பாளர் பரிசீலனைப் பட்டியலில் தற்போதைய எம்பி மனோஜ் திவாரி, சத்யா சர்மா, மோகன் சிங் பிஸ்ட் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
கிழக்கு தில்லி - கிழக்கு தில்லி தொகுதிக்கு தற்போதைய எம்பி மகேஷ் கிரி, நகுல் பரத்வாஜ், ஓபி சர்மா, குல்ஜீத் சாஹல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இதில் பாஜக யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலைவரான நகுல் பரத்வாஜ் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டவராவார்.
சாந்தினி செளக் - சாந்தினி செளக் தொகுதிக்கு மத்திய அமைச்சரும் தற்போதைய எம்பியுமான ஹர்ஷ் வர்தன், சுதன்ஷு மிட்டல், அசோக் கோயல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புதிய பட்டியலில் மத்திய அமைச்சர் விஜய் கோயலின் பெயர் இடம் பெறவில்லை. இவர் தற்போது பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்து வருகிறார்.
தெற்கு தில்லி - தற்போதைய எம்பி ரமேஷ் பிதூரி, ரன்பிர் சிங் பிதூரி, பிரஹம் சிங் தன்வார், தரம்வீர் சிங், ரூபி யாதவ் ஆகியோரின் பெயர்கள் தெற்கு தில்லி தொகுதிக்கான வேட்பாளர் பரிசீலினைப் பட்டியலில் உள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...