இளைஞர் குத்திக் கொலை
By DIN | Published On : 30th March 2019 11:58 PM | Last Updated : 30th March 2019 11:58 PM | அ+அ அ- |

தில்லியின் ரோகிணி செக்டார்-3 பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது: வர்தன் என்ற அந்த இளைஞர், தனது நண்பர் வினயுடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு ரோகிணி செக்டார்-3 பகுதி சென்றுள்ளார். அந்த நண்பரின் வீட்டு வாசலில் இருவரும் நின்றிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், வர்தனை சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், அவரது தலையில் கல்லையும் போட்டுவிட்டு, தப்பிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வர்தனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலைநகரில் லேசான மழை
புது தில்லி, மார்ச் 30: தலைநகர் தில்லியின் தெற்கு, மத்திய பகுதியில் சனிக்கிழமை லேசான மழை பெய்தது.
இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:
நகரின் தெற்கு, மத்திய பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸாக பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 87 சதவீதமாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...