18 தொகுதிகள் இடைத்தேர்தல்: சிறப்புப் பார்வையாளர்கள் கோரிய மனு தள்ளுபடி
By DIN | Published On : 30th March 2019 12:36 AM | Last Updated : 30th March 2019 12:36 AM | அ+அ அ- |

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சிறப்புப் பார்வையாளர்கள் குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக வழக்குரைஞர்கள் அ. ராஜராஜன், ஆர். நரேஷ்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 25-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.
அதில், "தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலை ஏற்கெனவே ஒத்திவைத்ததைப் போல ஒத்திவைக்காமல் இருக்க தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். பாரபட்சமற்ற முறையிலும், சுதந்திரமாக செயல்படவும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட வேண்டும். தமிழக இடைத்தேர்தல் நியாயமான, சுதந்திரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய நீதி, நிர்வாகம், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் பார்வையாளர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜராஜன் ஆஜராகி, "இதே கோரிக்கையை வலியுறுத்தி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதால், இந்த "ரிட் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்' என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...