இணைய வழியில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 6.6 லட்சம் குறைந்தது
By DIN | Published On : 05th May 2019 11:48 PM | Last Updated : 05th May 2019 11:48 PM | அ+அ அ- |

அண்மைக் கால வரலாற்றில் முதல் முறையாக கடந்த 2018-19 நிதியாண்டில் இணைய வழியில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.6 லட்சம் குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரி துறை புள்ளிவிவரத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்மையில் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் 6.68 கோடி பேர் இணையம் மூலமாக தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இது, முந்தைய நிதியாண்டில் தாக்கல் செய்த எண்ணிக்கையான 6.74 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.6 லட்சம் குறைவாகும்.
2016-17 நிதியாண்டில் இணைய வழியில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5.28 கோடியாக இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும், வருமான வரி வலைதளத்தில் பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மார்ச் 31-ஆம்தேதி நிலவரப்படி 15 சதவீதம் அதிகரித்து 8.45 கோடியை எட்டியுள்ளது. 2013 மார்ச்சில் 2.7 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை 2016 மார்ச்சில் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்து 5.2 கோடியாகவும், 2017 மார்ச்சில் 6.2 கோடியாகவும் ஆனது.
பதிவு செய்துகொண்டவர்களில் உண்மையில் 79 பேர் சதவீதம் மட்டுமே 2018-19 நிதியாண்டில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இது, முந்தைய 2017-18 நிதியாண்டில் காணப்பட்ட 91.6 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் பிரிவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை நிலையான அளவில் அதிகரித்து வருகிறது. இப்பிரிவில் கடந்த 2018-19 நிதியாண்டில் 1.02 கோடி தனிநபர் வரி செலுத்துவோர் உள்பட 1.05 கோடி பேர் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.