பாதுகாப்புப் படை வீரர்களை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்க முயன்றதாக மேற்கு தில்லி பாஜக எம்.பி.யும், அந்தத் தொகுதியின் தற்போதைய வேட்பாளருமான பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போது, புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்காக 13 நாள்களுக்குள்ளாக பிரதமர் நரேந்திர மோடி பதிலடி தாக்குதல் நடத்தியதாக பர்வேஷ் வர்மா பேசியுள்ளார். பாதுகாப்புப் படையினரை குறிப்பிட்டு வாக்கு சேகரிக்க தேர்தல் ஆணையம் தடை வித்துள்ள நிலையில், அதுதொடர்பாக பேசியதற்காக விளக்கமளிக்குமாறு பர்வேஷ் வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கூட்டத்தின்போது ஒரு சமூகத்தினரின் பெயரை பர்வேஷ் வர்மா குறிப்பிட்டு பேசி வாக்கு கோரியதாகவும், அதேபோல், பொதுவில் குறிப்பிட இயலாத வார்த்தை ஒன்றை அவர் பயன்படுத்தியதாகவும், தேர்தல் அதிகாரி அஸிமுல் ஹக் அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 48 மணி நேரத்துக்குள்ளாக பதிலளிக்குமாறு பர்வேஷ் வர்மாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.