பூர்வாஞ்சல் சமூகத்தினரை அவமதித்துவிட்டார் கேஜரிவால்': தில்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் மனோஜ் திவாரி புகார்
By DIN | Published On : 05th May 2019 11:49 PM | Last Updated : 05th May 2019 11:49 PM | அ+அ அ- |

பூர்வாஞ்சல் சமூகத்தினரையும், தனது தொழிலையும் அவமதித்துவிட்டதாகக் கூறி, முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக, பாஜக வேட்பாளரான மனோஜ் திவாரி தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டேவை ஆதரித்து கேஜரிவால் சமீபத்தில் அங்கு பிராசரத்தில் ஈடுபட்டார். அப்போது, மக்களை எவ்வாறு ஆட வைக்க வேண்டும் என்று திலீப் பாண்டேவுக்குத் தெரியாது. ஆனால், இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மனோஜ் திவாரிக்கு அது நன்றாகத் தெரியும்' என்று பேசினார்.
தில்லி பாஜக தலைவராக இருக்கும் மனோஜ் திவாரி, நடிகர் மற்றும் பாடகராகவும் இருப்பதை குறிப்பிட்டு கேஜரிவால் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் மனோஜ் திவாரி புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பாடகர் மற்றும் நடிகர் என்ற எனது அடையாளத்தை அரவிந்த் கேஜரிவால் அவமதித்துவிட்டார். எனது இந்தத் தொழில் ஒன்றும் சட்டவிரோதமானது கிடையாது. இந்நாட்டில் தொழில் சார்ந்து செயல்படும் அனைவருமே பெருமையுடன் உணர்கின்றனர். அதேபோல், தில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் சமூகத்தினரின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். இந்நிலையில், கேஜரிவால் என்னை அவமதித்ததன் மூலம் எனது சமூகத்தையும் அவமதித்து விட்டார்.
இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளின் மூலம் கேஜரிவால் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியுள்ளார். என்னையும், எனது ஆதரவாளர்களையும், எனது சமூகத்தினரையும் தூண்டு வகையில் பேசிய கேஜரிவால், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.