தில்லியில் யார் மக்கள் பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கே வாக்களியுங்கள் என்று குஜராத் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வத்கம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷியை ஆதரித்து கிழக்கு தில்லி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கிழக்கு தில்லி ஷாதரா சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சீமாபுரி பகுதியில் அதிஷி மர்லினாவின் பிரசாரப் பேரணியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தில்லி அரசுப் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் 94.24 சதவீதமாக உள்ளது. தில்லி கல்வி அமைச்சக ஆலோசகராக இருந்த அதிஷிக்கு இச்சாதனையில் முக்கியப் பங்குண்டு. தில்லி அரசுப் பள்ளிகளை மற்ற மாநில அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக மாற்றியவர் அவர்.
தளராது மக்கள் பணியாற்றக் கூடியவர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். தில்லியில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கே வாக்களியுங்கள் என்றார்
அவர்.
மேற்கு தில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பல்பீர் சிங் ஜாக்கரை ஆதரித்து மேற்கு தில்லி பகுதிகளில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி அமைப்பாளருமான கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் பல்பீர் சிங் நாடறிந்த சமூக சேவகர். அவரை மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.