ரூ.2 கோடி தங்கம் கடத்த முயன்றதாக வெளிநாட்டினர் உள்பட 5 பேர் கைது
By DIN | Published On : 05th May 2019 11:49 PM | Last Updated : 05th May 2019 11:49 PM | அ+அ அ- |

தில்லி விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயன்றதாக துர்க்மீனிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி விமான நிலையத்தின் சுங்கத் துறை அதிகாரி தெரிவித்திருப்பதாவது:
தில்லி விமான நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை வெவ்வேறு விமானங்களில் வந்த நான்கு துர்க்மீனிஸ்தான் நாட்டவர்களிடம் சோதனையிடப்பட்டது. அப்போது, அவர்களில் இருவர் துபையில் இருந்தும், மற்றவர்கள் துர்க்மீனிஸ்தான் நாட்டில் இருந்தும் வந்தது தெரிந்தது.
அவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்ட போது, அவர்களிடம் தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், கைச் சங்கிலி, டாலர்கள் என 4.4 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் துர்க்மீனிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில் ஹாங்காங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை விமானத்தில் வந்த இந்தியாவைச் சேர்ந்த பயணியின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. அதில் 3 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவங்களில் மொத்தம் ரூ.2 கோடி மதிப்புள்ள 7.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.