கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி காவல் நிலையத்தில் புகார்
By DIN | Published On : 15th May 2019 07:05 AM | Last Updated : 15th May 2019 07:05 AM | அ+அ அ- |

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் அகில பாரதிய ஹிந்து மகா சபை புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் சந்தர் பிரகாஷ் கௌசிக், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்துதான் எனக் கூறியதன் மூலம் ஹிந்துக்களின் மனதை கமல்ஹாசன் புண்படுத்திவிட்டார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தொடர்பாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவரை எந்தவொரு இடத்திலும் பயங்கரவாதி எனத் தெரிவிக்கவில்லை. மாறாக அவரைக் கொலையாளி என்றே குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆதாயத்துக்காக சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். இதனால், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதை அவர் புண்படுத்திவிட்டார். அவருடைய பேச்சு இந்திய தண்டனையியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தப் பேச்சு பெருமளவில் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஹிந்துக்களின் மனதை புண்படுத்திய கமல்ஹாசன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்றார் அவர்.
நீதிமன்றத்தில் ஹிந்து சேனை மனு தாக்கல்: இதற்கிடையே, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கமல்ஹாசனுக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஹிந்து சேனை அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மனுத் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நாட்டு மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வரும் வேளையில், அதை திசை திருப்பும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்களிடையே பிரிவினையை தூண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கை வரும் வியாழக்கிழமை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது' என்றார்.