தில்லிக்கென மனித உரிமைகள் ஆணையம் அமைக்கக் கோரும் மனு: தில்லிக்கென மனித உரிமைகள் ஆணையம் அமைக்கக் கோரும் மனு
By DIN | Published On : 15th May 2019 07:05 AM | Last Updated : 15th May 2019 07:05 AM | அ+அ அ- |

தில்லியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, அபிஜித் மிஸ்ரா என்ற பொருளாதார நிபுணர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1993-ஆம் ஆண்டைய மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்படி, தில்லியில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் தில்லி அரசு எடுக்கவில்லை.
இதன் மூலம் தில்லி மக்களின் உரிமைகள், மரியாதை, கண்ணியம் ஆகியவற்றை காப்பதில் தில்லி அரசு தோல்விகண்டுவிட்டது. தில்லவாசிகளின் மனித உரிமை மீறல் புகார்களுக்கு தீர்வு காண எந்த அமைப்பும் இல்லாதது துரதிருஷ்டவசமானது' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே.பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான நிலைப்பாட்டை, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் நாளான செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி, ஆம் ஆத்மி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.